Skip to main content

Story 3


         

     ஆபிரகாம் லிங்கனின் முடிவு?

 தங்களுக்குத் தேவையான பணத்தைக் குவிக்கத் தவறுகின்ற பெரும்பாலான மக்கள், பொதுவாக மற்றவர்களின் அபிப்ராயங்களின் தாக்கத்திற்கு எளிதில் ஆளாகின்றனர். அவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கு பதிலாக மற்றவர்களின் அபிப்பிராயங்கள், பத்திரிக்கைச் செய்திகள் போன்றவை தங்கள் முடிவுகளில் தாக்கம் விளைவிக்க அனுமதித்து விடுகின்றனர். அபிப்ராயங்கள் தான் இவ்வுலகில் மிகவும் மலிவானவை. காதுகொடுத்துக் கேட்க ஒருவர் தயாராக இருக்கும் பட்சத்தில், அவரிடம் கூறுவதற்கு ஒவ்வொருவரிடமும்  ஏராளமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய முடிவுகளை எடுக்கும்போது மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள் உங்கள் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தினால், உங்கள் ஆழ்விருப்பத்தைப் பணமாக மாற்றும் முயற்சி உட்பட, உங்களது எந்த ஒரு முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெறமாட்டீர்கள்.  மற்றவர்களுடைய அபிப்ராயங்களின் தாக்கத்திற்கு நீங்கள் ஆளானால் உங்களுக்கென்று சுயமாக எந்தவோர் ஆழ்விருப்பமும் இருக்காது.  நீங்களே உங்களது சொந்த ஆலோசனையாளராக இருங்கள். இக்கொள்கைகளை நீங்கள் செயல்படுத்த துவங்கும்போது சொந்தமாக தீர்மானிப்பதற்கு உங்களை மட்டுமே சார்ந்திருங்கள். பிறகு உங்கள் தீர்மானங்களை சிரமேற்கொண்டு நிறைவேற்றுங்கள். உங்களுடைய பலமன ஐக்கியச் செயல்பாட்டுக் குழுவினரைத் தவிர வேறு எவரிடமும் எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய குறிக்கோள்களை முழுமையாக ஆதரிக்கின்ற, முற்றிலும் இணக்கத்தை வெளிப்படுத்துகின்ற நபர்களை மட்டுமே அக் குழுவில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுப்பதில் மிகவும் உறுதியாக இருங்கள்.  நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் தங்களையும் அறியாமல் தங்கள் 'அபிப்பிராயங்கள்' மூலமும் சில சமயங்களில் தங்கள் கேலிப் பேச்சின் மூலமும் இடையூறாக அமைந்துவிடுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தாழ்வு மனப்பான்மையை சுமந்து திரிவதற்குக் காரணம், அவர்களது நலனை விரும்புகின்ற, ஆனால் அறியாமையில் உழன்று கொண்டிருக்கின்ற நபர்கள் தங்களது அபிப்பிராயங்கள் மற்றும் கேலிப் பேச்சின் மூலம் அவர்களது தன்னம்பிக்கையை வேரோடு அழித்ததுதான்.  உங்களுக்கு சொந்தமாக ஒரு மூளையும் மனமும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி உங்களுடைய சொந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள். தீர்மானங்கள் எட்டுவதற்கு மற்றவரிடம் தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டால், உங்களுடைய குறிக்கோள்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அத்தகவல்களை அமைதியாக சேகரியுங்கள்.  அரைகுறை அறிவு கொண்ட மக்கள் தாங்கள் அறிந்துள்ளதை விட அதிகமான விஷயங்கள் தங்களுக்கு தெரியும் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களுடைய பண்பு நலன்களில் ஒன்று. இப்படிப்பட்டவர்கள் பொதுவாக அளவுக்கதிகமாக பேசுவர், மிகக் குறைவாக காது கொடுத்து கேட்பர், தீர்மானங்களைத் துரிதமாக மேற்கொள்ளும் பழக்கத்தை நீங்கள் கை வசப்படுத்த விரும்பினால், உங்கள் வாயை இருக்கமாக மூடிக்கொண்டு உங்கள் கண்களையும் காதுகளையும் அகலத் திறந்து வைத்திருங்கள். அளவுக்கதிகமாக பேசுபவர்கள் வேறு எதையும் அவ்வளவாகச் செய்வதில்லை காதுகொடுத்து கேட்பதை விட அதிகமாக நீங்கள் பேசினால், உங்களுக்கு மிகவும் பயனுள்ள சில தகவல்களை நீங்கள் தவற விடக்கூடும். அளவுக்கதிகமாக பேசுவதன் மூலம் உங்கள் மீதுள்ள பொறாமையின் காரணமாக உங்களை தோற்கடிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்ளும் மக்களிடம் உங்கள் குறிக்கோளையும் திட்டங்களையும் உங்களை அறியாமலேயே நீங்கள் வெளிப்படுத்தவும்கூடும்.  உண்மையிலேயே அறிவார்ந்த ஒரு நபரின் முன்னிலையில் நீங்கள் உங்கள் வாயை திறக்கும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் இருக்கும் அறிவு அல்லது உங்களிடம் அறிவு இல்லாததை நீங்கள் அவருக்கு வெளிப்படுத்துகிறீர்கள். பணிவும் அமைதியும்தான் உண்மையான ஞானத்திற்கான அடையாளங்கள்.  ஒவ்வொரு நபரும் உங்களைப்போலவே பணத்தைக் குவிப்பதற்கான வாய்ப்பைத் தேடுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய திட்டங்களைப் பற்றி தாராளமாக நீங்கள் பேசினால் நீங்கள் பெருமையாக தம்பட்டம் அடித்த அதே திட்டங்களை பயன்படுத்தி உங்களுக்கு முன்னால் இன்னொருவர் பணத்தைக் குவித்து உங்களைத்  தோற்கடித்துள்ளதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.  வாயை மூடிக்கொண்டு, கண்களையும் காதுகளையும் திறந்து வைப்பது உங்களுடைய முதல் தீர்மானங்களில் ஒன்றாக இருக்கட்டும். "நீங்கள் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதை உலகத்தாரிடம் கூறுங்கள், ஆனால் முதலில் அதைச் செய்து காட்டுங்கள் என்ற வாசகத்தை கொட்டை எழுத்தில் எழுதி நீங்கள் தினமும் பார்க்கக்கூடிய ஓரிடத்தில் வையுங்கள். "வார்த்தைகள் வீணானவை,செயல்கள்தான் மதிப்புவாய்ந்தவை" என்று கூறுவதற்கு இணையானது அது.  தீர்மானங்களின் மதிப்பு, அவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான துணிச்சலைச் சார்ந்துள்ளது. மனிதகுல நாகரீகத்தின் அடித்தளமாக அமைந்த மிகப்பெரிய தீர்மானங்கள் அனைத்தும் மரணத்திற்கு கூட அஞ்சாமல் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளால் மட்டுமே சாத்தியமாயின. கருப்பர் இன மக்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்த 'அடிமை ஒழிப்பு சாசன'த்தை வெளியிடுவதென்று அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் தீர்மானித்தபோது தனது இச்செயல் ஆயிரக்கணக்கான நண்பர்களையும் அரசியல் ஆதரவாளர்களையும் தனக்கு எதிராகத் தூண்டிவிடும் என்பதை முழுமையாக அறிந்தே அத்தீர்மானத்தை மேற்கொண்டார். தன்னுடைய போதனைகளைக் கைவிட வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும். என்று சாக்ரடீஸுக்கு ஏதன்ஸ் ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தபோது,தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளைத் துறப்பதைவிட விஷத்தை பருகுவதே மேல் என்று சாக்ரட்டீஸ் மேற்கொண்ட தீர்மானம் ஒரு துணிச்சலான தீர்மானமாகும். அது காலத்தை முன்னோக்கி சுழலச் செய்து, எதிர்கால சந்ததியினருக்கு சிந்தனைச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் கிடைப்பதற்கு வழிவகுத்தது.


                        (Source: Think & Grow Rich) 

Comments